மிழ்நாட்டு அரசியல் களத்தை தன் பக்கம் திருப்ப நினைக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அரை நூற்றாண்டுக்கு மேலாக திராவிட கட்சிகள் கோலோச்சி வரும் மாநிலத்தில் பா.ஜ.க.வின் வியூகம், கள நிலவரம் பற்றி விரிவாகவே பேட்டியளித்தார், பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன்.

பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவர் பொறுப்பை நீங்கள் ஏற்றதில் இருந்து தமிழகத்தில் அதிகமாக பார்க்க முடியவில்லை. மகளிர் அணித் தலைவர் பணிகள் எப்படி இருக்கிறது?

வானதி: அக்டோபர் 2020-ல் தலைவராக அறிவித்தார்கள். நவம்பரில் பொறுப்பை ஏற்று ஜனவரி வரை வெளி மாநிலங்களுக்கு போயிருந்தேன். கோவை தெற்கில் போட்டியிட்டபோது அங்கேயே இருந்தேன். எம்.எல்.ஏ. ஆன பிறகு சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். பின்னர் எனது தொகுதியில் மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் தீர்த்துவைக்க ஒரு டீம் தயார் செய்துவிட்டு, தேசிய தலைவர் பணியில் ஈடுபட்டு வருகிறேன். நாடு முழுவதும் உள்ள மகளிர் அணி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதும், எங்களது செயல் திட்டங்களை செயல்படுத்துவதற்குமாக இப்போது பல மாநிலங்களுக்கு சென்று வருகிறேன்.

v

Advertisment

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நான்குபேரின் வெற்றி, கட்சியின் வெற்றி அல்ல... நான்கு பேரின் தனிப்பட்ட செல்வாக்கினால் வந்த வெற்றி என்ற கருத்து நிலவுகிறதே?

வானதி: கட்சி பலம், கூட்டணி பலம், வேட்பாளர் பலம் என இவை அனைத்தும் சேர்ந்துதான் வெற்றி கிடைத்திருக்கிறது. தனிப்பட்ட வெற்றி என்பதை ஏற்க முடியாது. கட்சித் தொண்டர்களுடைய உழைப்பு, கூட்டணிக் கட்சியினர் கொடுத்த ஒத்துழைப்பு, அவர்களுடைய பலம், வாக்கு வங்கி என எல்லாம் சேர்ந்துதான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. பா.ஜ.க.வை குறைத்து மதிப்பிடுவதற்காக தனிப்பட்ட வெற்றி என்று சொல்வதை ஏற்க முடியாது.

கட்சியில் சேர்ந்த ஒரு வருடத்தில் அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதில் கட்சியில் பலருக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறதே?

Advertisment

வானதி: பா.ஜ.க. ஒரு வித்தியாசமான கட்சி. இங்கு மூத்த உறுப்பினர்களுக்கும், கட்சியில் உழைத்தவர்களுக்கும் மரியாதை இருக்கிறது. புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்த கலவையாக இருப்பதால்தான் அத்தனைபேரும் இந்தக் கட்சியை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்கிறோம். கட்சியில் மூத்த தலைவர்களின் ஆலோசனைகள், கருத்துக்களைக் கேட்டு அனைவரும் சேர்ந்து குழுவாகத்தான் வேலைசெய்யப் போகிறோம்.

கொங்குநாடு விவாதத்தில் பாஜகவுக்கு எதிராக கண்டனங்கள் குவிகிறதே...

வானதி: கொங்குநாடு விஷயத்தில் பா.ஜ.க. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. தமிழகத்திற்கு அதிகமாக தனது பங்கினை கொடுத்துக்கொண்டிருக்கிற பகுதி கொங்குநாடு. தேவையான திட்டங்கள் அங்கு நிறைவேற்றப்படுகிறதா? என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறபோது அந்தப் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் இன்றும் இருக்கிறது. அந்தப் பகுதியினுடைய வளர்ச்சி, முன்னேற்றத்தில் பா.ஜ.க.வுக்கு அக்கறை இருக்கிறது. இன்னொன்று கொங்குநாடு என்பதை பா.ஜ.க.தான் முதலில் சொல்கிறதா? தி.மு.க. கூட்டணியில் வெற்றிபெற்ற ஈஸ்வரனின் கட்சியின் பெயரே அதுதான். அவருடைய கட்சியின் கூட்டங்கள் அனைத்திலும் பேசியிருக்கிறார்.

எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற பயோடேட்டாவில் கொங்குநாடு என இருப்பது சரியா?

வானதி: அதற்கான விளக்கத்தை அவர் கொடுத்துவிட்டார்.

கிளரிக்கல் மிஸ்டேக் என சொல்வது ஏற்கக்கூடியதா?

vv

வானதி: பயோடேட்டாவில் குறிப்பிடப்பட்டிருந்தது பற்றி அவர் விளக்கம் அளித்துவிட்டார். இதற்குமேல் நான் எதுவும் சொல்லக்கூடிய இடத்தில் இல்லை.

ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தலாம், கையிலெடுக்கலாம் என அண்ணாமலை கட்சியினர் முன்பு பேசியதற்கு நிறைய கண்டனங்கள் எழுகிறதே?

வானதி: எந்த வரையறைக்குள்ளும் வராத, கட்டுப்பாடுகளுக்கும் வராத சமூக வலைத்தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிறைய நபர்கள், நிறைய பொய் செய்திகளை வெளியிடுவது, பொறுப்பில்லாமல் வெளியிடுவது குறித்தும்தான் சொன்னார். அதற்கு அவரே விளக்கமும் கொடுத்திருக்கிறார். ஊடகத்திற்கு என்றைக்கும் பா.ஜ.க. மரியாதை கொடுக்கிறது. தொடர்ந்து ஊடக சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கிறது பா.ஜ.க.

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதனை மாற்றுவதற்காக கொங்குநாடு போன்ற விவாதங்களை பா.ஜ.க. எழுப்பியுள்ளது என்கிறார்களே?

வானதி: நாட்டின் வளர்ச்சியை விட்டுவிட்டு வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார்கள் நாங்களும் பலவற்றைச் சொல்ல முடியும். ஒவ்வொரு சமயத்திலும், சந்தர்ப்பத்திலும் எது மக்களுடைய தேவையாக இருக்கிறதோ அதற்கு குரல் கொடுக்கிறோம்.

தடுப்பூசி தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு என கண்டனங்கள் தொடர்ந்து எழுகிறதே?

வானதி: எந்தெந்த சமயத்தில் எத்தனை தடுப்பூசிகள் அனுப்பப்படுகிறது என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தைவிட ஜூலை மாதம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது மத்திய அரசு. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நாங்கள் நான்குபேரும் பிரதமரை சந்திக்கும்போது தடுப்பூசி குறித்து பேசினோம். தடுப்பூசிகளை வாங்கிய உடனே எவ்வளவு விரைவாகப் போட்டு முடிக்கிறார்களோ, எந்த அளவுக்கு வேகமாக மாநில அரசு வேலை செய்கிறதோ, அந்த அளவுக்கு கொடுப்பதற்கு பிரதமர் உறுதியளித்திருக்கிறார்.

தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறவேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். மின்சாரம், மூலப்பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் இந்த நாட்டில் நாம் உற்பத்தி செய்யவேண்டும். அதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கவேண்டும். தொழில்நுட்பம், நிதி உள்ளிட்டவைகளை அரசு கொடுக்கவேண்டும் என நினைக் கிறார். அதனால்தான் தடுப்பூசி இங்கு உற்பத்திபண்ண முடிந்திருக்கிறது. இல்லையென்றால் அதனை நாம் வெளி நாட்டில் விலைக்கு வாங்கிக் கொடுத்திருப்போம். அதன் விலை எவ்வளவு என்று தெரியாது.

தடுப்பூசியை இங்கிருந்து ஏற்றுமதி செய்ததால்தான் தட்டுப்பாடு வந்தது என விமர்சனம் எழுகிறதே?

வானதி: இரண்டு தடுப்பூசிகளை இங்கேயே கண்டுபிடித்துள்ளோம். இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை இல்லையா? அதனை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? ஏற்றுமதி செய்தார் என சொல்கிறீர்கள். சரிதான். அந்த நேரத்தில் எந்த நாடு கேட்டாலும் தடுப்பூசி கொடுத்தோம், ஹைட்ராக்சி குளோரோ குயின் கொடுத்தோம். உடனே இரண்டாம் அலையின்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நாம் என்ன உதவி கேட்டாலும் அவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். இது வெளியுறவுத் துறையால் வந்த மிகப்பெரிய வெற்றி.

பெட்ரோல், டீசல் சர்வதேச அளவில் 85 சதவீதம் வாங்குகிறோம். சர்வதேச அளவில் அதன் விலை குறையும்போது, இங்கே அதன் பலனை தனித்தனியாக கொடுப்பதைவிட ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். 2014-ல் இருந்து கடந்த 7 வருடத்தில் பல்வேறு திட்டங்கள் வாயிலாக கிட்டதட்ட ஆறு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வந்திருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத தொகை அது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் அதிகமாக வீடு கிடைத்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இவையெல்லாம் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்த பணம்தானே. தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக உயரணும். ஒட்டுமொத்த தமிழர்களும் உயரணும் என்று நினைக்கிறோம். அதுபோல, ஒட்டுமொத்த இந்தியாவும் வளரணும் என மத்திய அரசு நினைக்கிறது. எல்லோரும் சேர்ந்து இந்த பிரச்சனைகளை சமாளித்து வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுப்பதுதான் இந்த நாட்டுக்கு நல்லது என்பது எங்களது அபிப்பிராயம்.

படங்கள் : விக்னேஷ்